செய்திகள் (Tamil News)

கேரள நிவாரண நிதிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 1 மாத சம்பளம் வழங்குகிறார்கள்- திருநாவுக்கரசர்

Published On 2018-08-20 07:55 GMT   |   Update On 2018-08-20 07:55 GMT
கேரள நிவாரண நிதிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் 1 மாத சம்பளத்தை வழங்குகிறார்கள் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #KeralaFloods
சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள்விழா காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜீவ்காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அண்டை மாநிலமான கேரள மாநிலம் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்காக தமிழக காங்கிரஸ் சார்பில் முதல்கட்டமாக ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படுகிறது.

மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் 1 மாத சம்பளத்தை வழங்குகிறார்கள். அதேபோல முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத ஓய்வூதியத்தையும் வழங்குகிறார்கள். இந்த நிதி அனைத்தையும் டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு அனுப்பி மொத்தமாக வழங்கப்படுகிறது.

இதேபோல வருகிற 22-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்படும். பணம் வாங்கப்படமாட்டாது. அவ்வாறு சேகரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.


ஊழலை ஒழிப்பேன் என்றும், தான் உத்தமர் என்றும் மோடி கூறிவந்தார். ஆனால் ரபேல் போர் விமானங்களை வாங்கியதில் பெரிய ஊழல் நடந்துள்ளது. ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் போராட்டம் நடத்தி மோடி அரசின் ஊழலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் குமரி அனந்தன், அகில இந்திய செயலாளர் செல்லக்குமார், முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி, மாநில நிர்வாகிகள் தணிகாசலம், சிரஞ்சீவி, பவன்குமார், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ரூபி மனோகரன், சிவராஜசேகர், வீரபாண்டியன் தாமோதரன், சொர்ணா சேதுராமன், தமிழ்செல்வன், மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். #Congress #Thirunavukkarasar #KeralaFloods
Tags:    

Similar News