கோவையில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பேரணி
கோவை:
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மேற்கு மண்டலத்தின் சார்பில் கோவையில் இன்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணி மகளிர் பாலிடெக்னிக் முன்பு இருந்து தொடங்கியது. பாலசுந்தரம் சாலை வழியாக சென்று வ.உ.சி. பூங்காவை அடைந்தது.
பேரணியில் கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பேரணிக்கு கோவை மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். மாநில கவுரவ பொது செயலாளர் குப்புசாமி, முன்னாள் மாநில தலைவர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கு மண்டல தலைவர் ரமணி, செயலாளர் ரவிச்சந்திரன், மண்டல பொறுப்பாளர்கள் பிரபாகர், சரவணன், ஜீவா, ஸ்ரீராம் உள்ளிட்ட 6 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு நியாயமான புதிய ஊதியம் வழங்க வேண்டும். விற்பனை யாளர்களுக்குரிய ஊதியத்தை மாதந் தோறும் அரசே நேரடியாக வழங்க வேண்டும்.
விற்பனையாளர்கள் காலி பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும். கூடுதல் பொறுப்பில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகளை ஆய்வு என்ற பெயரில் பல்துறை அலுவலர்கள் மாமூல் பெற்று வருவது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். விற்பனையாளர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து உடனே கலைய வேண்டும். கட்டுநர் இல்லாத நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் பணியா ளர்களுக்கு ரூ.1500 கூடுதல் படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.
பேரணி முடிந்ததும் நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து நிர்வாகிகள் கூறும்போது, எங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் அடுத்த மாதம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.