செய்திகள்

ஹெல்மெட் உத்தரவை ஏன் தீவிரமாக அமல்படுத்தவில்லை? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

Published On 2018-08-21 07:46 GMT   |   Update On 2018-08-21 07:46 GMT
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த அரசாணை எந்த அளவுக்கு தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #Helmet #HighCourt
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், ராஜேந்திரன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ‘மோட்டார் வாகன சட்டத்தின்படி, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர், பின்னால் உட்கார்ந்து இருப் பவர் ஆகியோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அதேபோல, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ‘சீட் பெல்ட்’ அணிந்திருக்க வேண்டும்.

ஆனால், இந்த மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்துவது இல்லை. இதனால், ஹெல்மெட் அணியாமல், செல்பவர்கள் விபத்தில் சிக்கி மரணமடைந்து வருகின்றனர்.

எனவே, இந்த சட்டவிதிகளை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.



இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஏற்கனவே கட்டாய ஹெல்மெட் அணியவேண்டும் என்ற அரசாணை இருக்கும்போது, அதை ஏன் அரசு தீவிரமாக அமல்படுத்தாமல் உள்ளது? இதுபோன்ற கட்டாய ஹெல்மெட் அணிவது தொடர்பான அரசாணையை மட்டும் வெளியிட்டு விட்டு அரசு அமைதியாக இருக்க முடியாது. அதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் தமிழகத்தில், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த அரசாணை எந்த அளவுக்கு தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது? என்பது குறித்து தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., போக்குவரத்து துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Helmet #HighCourt
 
Tags:    

Similar News