செய்திகள் (Tamil News)

விஜயகாந்த் மீண்டு வருவாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு

Published On 2018-08-26 10:00 GMT   |   Update On 2018-08-26 10:00 GMT
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டு முன்பு போல அரசியலில் ஈடுபடுவாரா? தொண்டர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். #DMDK #Vijayakanth

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அரசியல் களத்தில் எவ்வளவு வேகமாக முன்னேறினாரோ, அதே வேகத்தில் வீழ்ச்சியையும் சந்தித்தார்.

விஜயகாந்த் என்றதும் சினிமாவில் நாம் பார்த்த அவரது கம்பீர தோற்றமும், கணீர் குரலும்தான் நினைவுக்கு வரும். சினிமாவில் அவர் அனல் தெறிக்க பேசிய வசனங்களே விஜயகாந்துக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனை மையமாக வைத்தே அரசியலில் குதித்த விஜயகாந்த் மக்கள் செல்வாக்கையும் பெற்றார். கட்சியை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே எதிர்க் கட்சி தலைவர் அந்தஸ்தையும் எட்டிப்பிடித்தார்.

தனித்து போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபித்த விஜயகாந்த் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய 2 பெரிய தலைவர்களையும் எதிர்த்து அரசியலில் வெற்றி பெற்றவர் என்கிற பெயர் விஜயகாந்துக்கு உண்டு.

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை தே.மு.தி.க. சந்தித்தது. அப்போது வீசிய மோடி அலையை பயன்படுத்தி வெற்றி பெற்று விடலாம், பாராளுமன்றத்துக்குள் கட்சியை கொண்டு சென்று விடலாம் என்று விஜயகாந்த் கணக்கு போட்டார்.

இதன் பின்னர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. முதல்-அமைச்சர் கனவோடு மக்கள் நலக்கூட்டணியுடன் கை கோர்த்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட போதும் தே.மு.தி.க. படுதோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடும் என்று விஜயகாந்த் இப்போதே அறிவித்து விட்டார்.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத அரசியல் களத்தில் தே.மு.தி.க.வின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலேயே தனித்து போட்டியிடும் முடிவை விஜயகாந்த் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த்துக்கு உடல் ரீதியாக மட்டுமின்றி அரசியல் களத்திலும் கடுமையான பின்னடைவே ஏற்பட்டுள்ளது.

அதில் இருந்து அவர் எப்படி மீண்டு வரப் போகிறார்? என்பதே மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

வெளி நாடுகளுக்கு சென்று அடிக்கடி சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் குரல் முற்றிலுமாகவே மாறி விட்டது. அரசியல் பயணத்தை தொடங்கிய நேரத்தில் சினிமாவில் ஒலித்த அதே குரல் ஒலித்தது.

மேடைகளில் மணிக்கணக்கில் நின்று விஜயகாந்த் பேசியுள்ளார். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக விஜயகாந்தின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின.

இதன் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் போது கட்சியினர் கைதாங்கலாக அவரை அழைத்து வந்தனர். விஜயகாந்தின் நடையில் தடுமாற்றம் காணப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்த், கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய போதும் அதே தள்ளாட்டத்துனேயே காணப்பட்டார்.

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பும் போது விஜயகாந்த் நல்ல உடல் நலத்தோடு திரும்புவார் என்றே தே.மு.தி.க.வினர் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் விஜயகாந்த்தின் உடல் நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது தே.மு.தி.க.வினரை சோர்வடைய செய்துள்ளது. இதில் இருந்து விஜயகாந்த் மீண்டு முன்பு போல அரசியலில் ஈடுபடுவாரா? உடல் நிலை அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News