செய்திகள் (Tamil News)

வெடித்தது கோஷ்டி பூசல் - தமிழக காங். பொருளாளர் நாசே. ராமச்சந்திரன் டெல்லி விரைந்தார்

Published On 2018-09-06 07:55 GMT   |   Update On 2018-09-06 07:55 GMT
காங்கிரஸ் தேசிய பொருளாளர் அகமது பட்டேல் அழைப்பின் பேரில் அவசரமாக டெல்லி சென்றுள்ள காங்கிரஸ் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்களோடு புகார் அளிக்க உள்ளார். #Congress
சென்னை:

தமிழக காங்கிரசில் கோஷ்டி மோதல் தீவிரம் அடைந்துள்ளது. திருநாவுக்கரசருக்கு எதிரான இளங்கோவன் அணியினர் ஏற்கனவே திருநாவுக்கரசரை தலைவர் பதவியில் இருந்து நீக்கக்கோரி டெல்லி தலைமையிடத்தில் பல்வேறு புகார்களை அளித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய்தத், சின்னா ரெட்டி ஆகயோர் நேற்று முன்தினம் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். அன்று மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்கு எற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் வந்தனர்.

திடீரென்று இரு கோஷ்டிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து 7 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக திருநாவுக்கரசர் அறிவித்தார். ஆனால் நீக்கப்பட்ட 7 பேரும் வெளியிட்ட அறிக்கையில், மாவட்டத்தலைவர், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் திருநாவுக்கரசருக்கு வேண்டப்பட்ட, கூட்டத்திற்கு அழைக்கப்படாத பலர் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.


இதைப்பார்த்த எங்களில் இருவர் கூட்ட அரங்கிற்கு உள்ளே சென்றனர். திருநாவுக்கரசர் அவர்களின் பெயரைச் சொல்லி வெளியேறச் சொன்னார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திருநாவுக்கரசரின் கார் ஓட்டுநர் தகராறு செய்து அடிக்க வந்ததால் மோதல் ஏற்பட்டது. இது ஏற்கனவே திருநாவுக்கரசு ஆதரவாளர்களால் திட்டமிட்டு நடைபெற்றதாகும். தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், காழ்புணர்ச்சியோடு ஏழு பேரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். இந்த நீக்கம் செல்லாது, என்று அறிவித்தனர்.

ஆதாரங்களோடு மாநில பொருளாளர் நாசே ராமச்சந்திரன் டெல்லி சென்றுள்ளார். இன்று தேசிய பொதுச் செயலாளர்கள் முகுல் வாசினிக், அசோக் கெலாட், தேசிய பொருளாளர் அகமது பட்டேல் ஆகியோரை சந்தித்து புகார் அளிக்க உள்ளார்.

மேலும் இன்று டெல்லியில் மாநிலத்தலைவர்கள், மாநில பொருளாளர்கள் கூட்டம் தேசிய பொருளாளர் அகமது பட்டேல் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்கான சுற்றறிக்கை ஒரு வாரத்திற்கு முன்பாகவே திருநாவுக்கரசருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் மாநில பொருளாளருக்கு திருநாவுக்கரசர் தகவல் தெரிவிக்கவில்லை. இதை அறிந்த அகமது பட்டேல் நேரடியாக தொலைபேசியில் நாசே ராமச்சந்திரனுக்கு அழைப்பு விடுத்தார். அங்கு இதைப்பற்றியும் புகார் அளிக்க உள்ளார்.

இதற்கிடையில் டெல்லியில் நடைபெறும் மாநில தலைவர்கள் மற்றும் பொருளாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருநாவுக்கரசர் டெல்லி சென்றார்.

இந்த கூட்டத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அழைப்பு வந்திருந்தும் இளங்கோவன் ஆதரவாளரான தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே. ராமச்சந்திரனுக்கு அழைப்பு பற்றி தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அகமதுபட்டேல் அழைப்பின் பேரில் நா.சே. ராமச்சந்திரன் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவங்கள் பற்றி ஆதாரங்களுடன் புகார் அளிக்க விருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Congress
Tags:    

Similar News