செய்திகள்

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதி தூக்க மாத்திரை தின்று தற்கொலை முயற்சி

Published On 2018-09-24 10:32 GMT   |   Update On 2018-09-24 10:32 GMT
3 டாக்டர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாற்றுத்திறனாளி தம்பதி தூக்க மாத்திரை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர்:

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளி தம்பதியினர் வந்திருந்தனர்.

அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் வந்த போது தாங்கள் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை தின்றனர். பின்னர் கலெக்டர் அலுவலக மாடியில் சென்ற போது தம்பதியினர் திடீரென அங்கேயே மயங்கி விழுந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் , தம்பதியினரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மாற்றுத்திறனாளி தம்பதி எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றனர்? என்று திருவாரூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 3 டாக்டர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

தற்கொலைக்கு முயன்ற தம்பதியினர் திருத்துறைப்பூண்டி காமராஜர் தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி(வயது 40) -அவரது மனைவி சித்ரா(35) என தெரியவந்தது. இருவரும் மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இதில் சித்ரா திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தட்சிணாமூர்த்தி ஆதிச்சபுரம் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தட்சிணாமூர்த்தி, சித்ரா ஆகியோர் ஊனத்தின் தன்மை குறித்து திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத் திரியில் பரிசோதனை நடந்தது. இதில் சித்ராவை பரிசோதித்த 3 டாக்டர்கள், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சித்ரா, இன்று கணவர் தட்சிணா மூர்த்தியுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது திடீரென தம்பதியினர் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தம்பதியினரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News