செய்திகள்

பதவி ஆசையில் அரசியலுக்கு வரக்கூடாது - ரஜினிகாந்த் கருத்துக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு

Published On 2018-10-27 08:40 GMT   |   Update On 2018-10-27 08:40 GMT
பதவி ஆசையில் அரசியலுக்கு வரக்கூடாது என்ற ரஜினிகாந்தின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வரவேற்பு தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #Congress #Rajinikanth
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இருப்பதாக கூறி, அதை பெரிதுபடுத்துகிறார்கள். ஆனால் எங்களுக்குள் எந்த கோஷ்டி மோதலும் இல்லை.

நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒரே ரோட்டில் தலைவர்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்ததை வைத்து கோஷ்டி பூசல் என்கிறார்கள். ஆனால் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.



எங்கள் கட்சியில் இருக்கும் கோஷ்டிபூசலை சரிசெய்யும்படி, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். முதலில் உங்கள் கட்சிக்குள் சுப்பிரமணியசாமி, ஜஸ்வந்த் சிங் போன்ற தலைவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை யோசியுங்கள்.

மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சில் துப்பக் கூடாது. முதலில் உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்கை துடையுங்கள்.

ரசிகர்கள் பண ஆசையுடனும், பதவி ஆசையுடனும் அரசியலுக்கு வரக்கூடாது என்று ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறார். இது எல்லா கட்சியினரும் சொல்லும் பொதுவான கருத்து தான். இது வரவேற்கத்தக்கது.

ரஜினியை தி.மு.க. விமர்சித்து இருப்பது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

தகுதிநீக்க விவகாரத்தில் அவர்கள் அப்பீலுக்கு சென்றால் இடைத்தேர்தல் நடைபெறுவது காலதாமதம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக முன்னாள் மத்திய மந்திரி வாழப்பாடி ராமமூர்த்தியின் 16-வது நினைவுநாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்துக்கு திருநாவுக்கரசர் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், நிர்வாகிகள் திருவான்மியூர் மனோகரன், கராத்தே ரவி, ஓட்டேரி தமிழ்செல்வன், தணிகாசலம் உள்பட பலர் கலந்துகொண்டனர். #Thirunavukkarasar #Congress #Rajinikanth

Tags:    

Similar News