செய்திகள்

இந்தியாவில் குளிர்பானத்தை விட ஒரு ஜிபி டேட்டா விலை குறைவு - ஜப்பானில் மோடி பெருமிதம்

Published On 2018-10-29 11:50 GMT   |   Update On 2018-10-29 11:50 GMT
டிஜிட்டல் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்துவரும் இந்தியாவில் ஒரு பாட்டில் குளிர்பானத்தை விட ஒரு ஜிபி இண்டர்நெட் டேட்டாவின் விலை குறைவாக இருப்பதாக ஜப்பானில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #1GBdata #cheaperinIndia #Modiinjapan
டோக்கியோ:

இருநாள் அரசுமுறைப் பயணமாக டோக்கியோ வந்தடைந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் மந்திரிகள், உயரதிகாரிகள் மற்றும் ஜப்பானுக்கான இந்திய தூதர் ஆகியோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னர், அங்கிருந்து இம்பரீயல் ஹோட்டலுக்கு சென்ற மோடியை ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் அன்புடன் வரவேற்றனர். அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி நேற்று யாமானாஷி நகருக்கு வந்தார்.

அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-வை சந்தித்த மோடி, இந்தியாவில் இருந்து கொண்டுசென்ற கலைநயம் மிக்க நினைவுப் பரிசுகளை அவருக்கு அளித்தார்.

ஜப்பானின் மிகப்பெரிய சிகரத்தை கொண்ட பியூஜி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள யாமானாஷி நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய ரோபோட் தயாரிப்பு தொழிற்சாலையை மோடி பார்வையிட்டார். பின்னர் இருவரும் இங்குள்ள பிரபல உணவகத்தில் மதிய உணவு அருந்தினர்.

இங்குள்ள தனது ஓய்வு இல்லத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கிறார். பின்னர், இரு நாட்டின் பிரதமர்களும் இங்கிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தலைநகர் டோக்கியோவுக்கு ரெயில் மூலம் வந்தனர்.

ஜப்பான் பிரதமருடன் இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்திய மோடி, டோக்கியோ நகரில் வாழும் இந்தியர்கள் மத்தியில் இன்று உரையாற்றினார்.

இந்தியாவில் தொலைத்தொடர்பு இணைப்புகளும், இன்டர்நெட் சேவையும் அபார வளர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்ட மோடி, வரும் 2022-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும். இதன் மூலம் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


நாட்டில் உள்ள அனைத்து கிராமப்பகுதிகளும் இன்டர்நெட் சேவையால் இணைக்கப்பட்டுள்ளன. சுமார் 100 கோடி மக்கள் இன்று கைபேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் ஒரு பாட்டில் குளிர்பானத்தை விட ஒரு ஜிபி இண்டர்நெட் டேட்டாவின் விலை குறைவாக உள்ளது. இதன்மூலம் விரைவான சேவைகளையும். வினியோகத் தொடர்புகளையும் பெற முடிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜப்பான் நாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபல தொழிலதிபர்களையும் இன்று சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். #1GBdata #cheaperinIndia #Modiinjapan
Tags:    

Similar News