செய்திகள் (Tamil News)

கோவை அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் குழந்தை பலி

Published On 2018-10-30 05:09 GMT   |   Update On 2018-10-30 05:09 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார துறை சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு கடந்த 58 நாட்களுக்கு முன்பு அக்‌ஷயா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தது.

இதற்காக குழந்தையை அவரது பெற்றோர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. நேற்று திடீரென குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து குழந்தையை டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 4 பேரும், பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 12 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 61 பேரும் என மொத்தம் 79 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதே போல கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்புடன் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News