செய்திகள்

அரசு பஸ் -தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி டிரைவர்கள் உள்பட 15 பேர் படுகாயம்

Published On 2018-11-14 16:18 GMT   |   Update On 2018-11-14 16:18 GMT
மாதேஸ்வரன் மலையில் வளைவில் திரும்பியபோது அரசு பஸ் -தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேட்டூர்:

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை மேட்டூர், மாதேஸ்வரன் மலை கோவில் வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர். காலை 7.30 மணிக்கு பஸ் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை அடிவாரத்தில் இருந்து மலை பாதையில் ஏறி ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்று கொண்டிருந்தது.

அதே நேரத்தில் மலை உச்சியில் உள்ள மாதேஸ்வரன் மலை கோவிலில் இருந்து ஒரு தனியார் பஸ் பயணிகளுடன் புறப்பட்டு மேட்டூரை நோக்கி மலை பாதை வழியாக கீழே இறங்கி கொண்டிருந்தது. நடுமலை மாதேஸ்வரன் கோவில் அருகே வளைவில் திரும்பும்போது தனியார் பஸ்சும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் வேகமாக மோதியது.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் டமார் என உடைந்து சிதறியது. பயணிகள் பயத்தில் அலறினார்கள். இந்த விபத்தில் 2 பஸ் டிரைவர்கள் உள்பட 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து மாதேஸ்வரன் மலை கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Tags:    

Similar News