செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் வினாத்தாளில் முறைகேடு- பழைய கேள்விகள் கேட்டதாக புகார்

Published On 2018-11-17 09:43 GMT   |   Update On 2018-11-17 09:43 GMT
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் வினாத்தாளில் 2017-ம் ஆண்டு கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் அப்படியே கேட்கப்பட்டு இருந்ததாக புகார் எழுந்துள்ளது. #AnnaUniversity

சென்னை:

அண்ணாபல்கலை கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் முறைகேடு நடந்த விவகாரம் பரபரப்பாகி அடங்குவதற்குள் மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த ஆண்டு நடந்த செமஸ்டர் தேர்வு வினாத்தாள் 2017-ம் ஆண்டு வினாதாளில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் அப்படியே கேட்கப்பட்டு இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

இ.சி.இ. பாடப்பிரிவில் 6-ம் பருவ தேர்வில் 100-க்கு 90 மதிப்பெண்கள் கடந்த ஆண்டு கேட்கப்பட்ட அதே கேள்விகள் அப்படியே இடம் பெற்று உள்ளன. புதிய வினாத்தாளில் 2 மார்க் கேள்விகள் மற்றும் எது சரியான விடை என்பது போன்ற கேள்விகள் வரிசை எண் கூட மாறாமல் கடந்த வருட வினாத்தாள் போன்றே கேட்கப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். வினாத்தாள் தயாரிக்கும் போது 4 மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்படும், அதில் ஒன்றை தான் தேர்வு குழுவினர் தேர்வு செய்வது வழக்கம். கடந்த வருடம் தேர்வு செய்யப்பட்ட அதே கேள்வித்தாளை எப்படி இந்த வருடம் தேர்வுக்கு பயன்படுத்தினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தற்செயலாக நடந்ததாக கருத முடியாது. திட்டமிட்டு தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

வினாத்தாளில் முறைகேடு நடந்திருப்பதால் மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும், இதனை விசாரிக்க சிறப்பு குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

அண்ணாபல்கலைக் கழகத்தில் மீண்டும் வினாத்தாள் முறைகேடு விஸ்வரூபம் எடுக்கிறது.  #AnnaUniversity

Tags:    

Similar News