செய்திகள்

கஜா புயல் பாதிப்பு - மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-11-22 09:10 GMT   |   Update On 2018-11-22 09:10 GMT
கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தை பேரிடராக அறிவிக்க கோரிய வழக்கில் மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #GajaCycloneRelief #MaduraiHC
மதுரை:

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்காக தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

வங்கக்கடலில் மையம் கொண்ட கஜா புயல் கடந்த 16-ந் தேதி கரையை கடந்தது. இந்த புயலால் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 45-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

புயலால் 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து விட்டன. ஏராளமான கால்நடைகள் பலியாகி விட்டன. 1.17 லட்சம் வீடுகளும், 88 ஆயிரத்து 102 ஹெக்டேர் பரப்பளவில் வாழை, நெல், தென்னை உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்து விட்டன.

எனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசின் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம்களை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அமைக்க வேண்டும். புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.



பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீட்பு பணியில் முப்படையினரையும், துணை ராணுவப்படையினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு கடந்த 20-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது கஜா புயல் பாதிப்பு குறித்து விரிவான அறிக்கையை 4 மாவட்ட கலெக்டர்களும் தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை இன்று (22-ந் தேதி) ஒத்தி வைத்தனர்.

அதன்படி இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் கஜா புயல் பாதிப்பு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக தமிழக அரசு இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கி உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் மத்திய அரசிடம் இருந்து உதவி கோர உள்ளோம். விரைவில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் நகரங்களில் மட்டுமே நடந்து வருகிறது. அதுவும் மெதுவாகத்தான் நடக்கிறது.

கிராமப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு இயல்புநிலை திரும்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலைகள் படுமோசமாக உள்ளன. கிராமப் புறங்களில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் ஒட்டுமொத்த பணிகளுக்கான விவரங்கள் மட்டுமே உள்ளன. சாலைப்பணிகள், மின்சாரம் சீரமைப்பு என தனித்தனியாக புள்ளி விவரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

எனவே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து தனித்தனியாக புள்ளி விவரங்களை விரிவான அறிக்கையாக வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு என்னென்ன உதவிகள் கேட்டுள்ளன என்பதையும் மனுவாக அன்றைய நாளில் தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #GajaCyclone #GajaCycloneRelief #MaduraiHC

Tags:    

Similar News