செய்திகள்

திமுக கூட்டணியில் பாமக இணையுமா?- திருமாவளவன் கடும் எதிர்ப்பு

Published On 2018-12-10 06:07 GMT   |   Update On 2018-12-10 06:07 GMT
திட்டமிட்டு தங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பா.ம.க. இருக்கும் அணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் இருக்காது என்று திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #PMK DMK
சென்னை:

தமிழகத்தில் பா.ஜனதா- அ.தி.மு.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வையும் சேர்த்துக் கொண்டால் அது கூட்டணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே பா.ம.க.வும் தி.மு.க. கூட்டணியில் சேருமா? என்கிற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டது. அன்புமணி ராமதாசை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்து அக்கட்சி களம் கண்டது.

‘‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’’ என்கிற கோ‌ஷத்துடன் பா.ம.க. தேர்தலை எதிர்கொண்டது. வட மாவட்டங்கள் சிலவற்றில் மட்டுமே செல்வாக்குள்ள கட்சியாக இருக்கும் பா.ம.க.வால் இந்த கோ‌ஷத்துடன் வெற்றி பெற முடியாமல் போய் விட்டது. மக்கள் மத்தியில் அது எடுபடாமல் போனது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. தேர்தலை சந்தித்தது. அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார்.


வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கூட்டணி குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜனதாவுடன் பா.ம.க. இணைக்கமான நிலையில் இல்லை. இதனால் தி.மு.க. கூட்டணியில் அக்கட்சியை சேர்ப்பதற்கான முயற்சிகள் தீவிரமாகி உள்ளன.

காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் தி.மு.க கூட்டணியில் பா.ம.க. இடம் பெற வேண்டும் என்றே விரும்புகின்றன. பா.ம.க.வில் உள்ள பலரும், தி.மு.க. கூட்டணியை விரும்புவதாகவே கூறப்படுகிறது.

ஆனால் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருவதை திருமாவளவன் மட்டும் விரும்பவில்லை. பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என்று அவர் திரும்ப திரும்ப கூறி வருகிறார். இதுவே தி.மு.க. அணியில் பா.ம.க. சேருவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

இது தொடர்பாக திருமாவளவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை. நெருடலும் இல்லை. கூட்டணியில் பா.ம.க.வை சேர்க்க தி.மு.க.வினர் முயற்சித்து வருவதாக கூறுவது தவறு. சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக சேர்த்து கொள்வார்கள். அதற்காக சுற்றி வளைத்தெல்லாம் பேச மாட்டார்கள்.

என்னை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேராது. அதற்கான வாய்ப்பு இல்லை.

விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக பேசினால் தான் சாதி ஓட்டுக்களை வாங்க முடியும் என்று பா.ம.க. கருதுகிறது. அதனால் தான் விடுதலை சிறுத்தைகளை பழித்து பேசுவதை குறிக்கோளாக வைத்துள்ளார்கள்.

திட்டமிட்டு எங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பா.ம.க. இருக்கும் அணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #PMK DMK
Tags:    

Similar News