செய்திகள்

குன்னூர் அருகே கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தைப்புலி

Published On 2018-12-13 18:15 GMT   |   Update On 2018-12-13 18:15 GMT
குன்னூர் அருகே கம்பி வேலியில் சிறுத்தைப்புலி சிக்கி தவித்தது.
குன்னூர்:

குன்னூர்-கோத்தகிரி சாலையில் வண்டிச்சோலை குடியிருப்பு பகுதி உள்ளது. இதன் அருகில் தேயிலை தோட்டங்களும் வனப்பகுதிகளும் உள்ளன. குன்னூர் வனசரகத்திற்கு உட்பட்ட வண்டிச்சோலை வனபகுதியில் வரையாடு, காட்டெருமை, சிறுத்தைப்புலி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

வனப்பகுதியில் இருந்து சில நேரங்களில் உணவு தேடி காட்டெருமை, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்த பகுதியில் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகாமல் இருக்க வண்டிச்சோலை அருகே உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 7.30 மணியளவில் சிறுத்தைப்புலி ஒன்று அந்த பகுதியில் நடமாடியது. அப்போது கம்பி வேலியை தாண்டி தேயிலை தோட்டத்திற்குள் செல்ல முயற்சித்தபோது, சிறுத்தைப்புலியின் முன்னங்கால் கம்பி வேலியில் சிக்கி கொண்டது.

பலமுறை முயற்சி செய்தும் கம்பி வேலியில் சிக்கிய காலை சிறுத்தைப்புலி எடுக்க முடியாமல் தவித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் உருமி கொண்டே இருந்தது. சிறுத்தைப்புலியின் உருமல் சத்தத்தை கேட்ட அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த குன்னூர் வனச்சரகர் பெரியசாமி தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் கம்பி வேலியில் சிக்கி தவித்த சிறுத்தைப்புலியை மீட்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

அதற்குள் சிறுத்தைப்புலி கம்பி வேலியில் சிக்கிய தனது காலை எடுத்துக்கொண்டு தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்து தப்பி சென்றது. சிறுத்தைப்புலி சுமார் 2 மணி நேரம் கம்பி வேலியில் சிக்கி போராடிக்கொண்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வனசரகர் பெரியசாமி கூறியதாவது:- கம்பி வேலியில் சிக்கியது 3 வயதுடைய ஆண் சிறுத்தையாகும். சிறுத்தைப்புலியை மயக்க மருந்து செலுத்தி மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்தோம். அதற்குள் சிறுத்தைப்புலி தனது காலை கம்பி வேலியில் இருந்து எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News