செய்திகள்

கனிமொழி எம்பிக்கு திமுக மகளிர் அணி வரவேற்பு

Published On 2018-12-14 09:40 GMT   |   Update On 2018-12-14 09:40 GMT
டெல்லியில் பாராளுமன்ற வாதி என்ற விருதை பெற்று திரும்பிய கனிமொழி எம்.பி.க்கு சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. மகளிர் அணியினர் வரவேற்பளித்தனர். #DMK #Kanimozhi
சென்னை:

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு சிறந்த பெண் “பாராளுமன்ற வாதி” என்ற விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

விருது பெற்ற அவர் இன்று சென்னை திரும்பினார். அதையொட்டி அவருக்கு தி.மு.க. மகளிர் அணி சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு சிறந்த பெண் பாராளுமன்ற வாதி விருதை அளித்த "லோக் மக்" பத்திரிகைக்கும், பாராளுமன்ற உறுப்பினர் குழுவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த நேரத்தில் கலைஞரை தான் நினைத்துக் கொள்கிறேன்.


அவர் மட்டும் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார். பெருமைப்பட்டிருப்பார். இந்த நேரத்தில் தி.மு.க.வுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும், பாராளுமன்ற மூத்த உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இன்னும் அதிகமாக பணியாற்ற இந்த விருது உத்வேகம் அளித்துள்ளது. அனைவரையும் இணைத்து மத சார்பற்ற இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என்ற உறுதியை ஏற்றுக் கொள்கிறேன்.

மேகதாது பிரச்சனை குறித்து தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறோம். இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

நடுவர்மன்ற கருத்து கேட்காமல் அணைக்கட்ட முடிவு எடுத்தது சரியானது அல்ல. பாராளுமன்றத்தில் ரபேல் விமான ஊழல் குறித்தும் கேள்வி எழுப்பப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #DMK #Kanimozhi
Tags:    

Similar News