செய்திகள்

ராயபுரம் அருகே வாலிபரை அரிவாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து தப்பிய 3 பேர் கைது

Published On 2019-01-14 06:44 GMT   |   Update On 2019-01-14 06:44 GMT
ராயபுரம் அருகே வாலிபரை அரிவாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து தப்பிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

ராயபுரம், ஆட்டுத்தொட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் நேற்று மாலை 5 மணியளவில் மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்றார்.

அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென ராஜேசை தாக்கி அரிவாளை காட்டி மிரட்டினர். பின்னர் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறித்துவிட்டு 3 பேரும் தப்பிச் சென்றனர்.

இது குறித்து வடக்கு கடற்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.

இந்த நிலையில் காசிமேடு தாண்டவராயன் தெருவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், தலைமை காவலர் பழனியாண்டவர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரிவாளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரதீப், மணிகண்டன், தண்டையார்பேட்டை விக்னேஷ் என்பதும் மண்ணடியில் ராஜேஷ் என்பவரை மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிளை பறித்து தப்பிய ½ மணி நேரத்தில் அவர்கள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

கைதான 3 பேரும் மோட்டார் சைக்கிளை பறித்து செல்லும் காட்சியை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இதுவும் போலீசாருக்கு கைகொடுத்தது.

மோட்டார் சைக்கிளை பறித்து தப்பியவர்களை அரை மணி நேரத்தில் மடக்கி பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், போலீஸ்காரர் பழனியாண்டவரை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News