செய்திகள்

திருவள்ளூர், காஞ்சீபுரம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் நீடிப்பால் அலுவலகங்கள் வெறிச்சோடியது

Published On 2019-01-30 10:07 GMT   |   Update On 2019-01-30 10:07 GMT
திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் நீட்டிப்பால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. #jactoGeo
திருவள்ளூர்:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர்கள் நேற்று முதல் பணிக்கு திரும்பினர். ஆனால் அரசு ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 92 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் ஊழியர்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசு அலுவலகங்களில் விண்ணப்பித்தவர்கள் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுவை தமிழக அரசு அழைத்து பேசாவிட்டால் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் போராட்டத்தை தடுக்க திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 98 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். அரசு ஊழியர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. #jactoGeo
Tags:    

Similar News