செய்திகள்

ராகுல்காந்தி விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன் - திருநாவுக்கரசர்

Published On 2019-02-04 10:07 GMT   |   Update On 2019-02-04 10:07 GMT
ராகுல் காந்தி என்னை தேர்தலில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi #Thirunavukkarasar
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட திருநாவுக்கரசர் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்றியதால் ராகுலை சந்திக்கும் வரை வருத்தம் இருந்து இருக்கலாம். இப்போது எந்த வருத்தமும் இல்லை. மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

இதுவரை எத்தனையோ தலைவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது அவர்களை அழைத்து பேசியதில்லை. ஆனால் ராகுல்காந்தி என்னை அழைத்து பேசியதே மிகப்பெரிய சந்தோ‌ஷம்.

புதிய தலைவருக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து காங்கிரஸ் தொண்டராக பணியாற்றுவேன். நான் தலைவர் பொறுப்பில் இருந்தபோது அனைத்து போராட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்து ஒத்துழைப்பு தந்த அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.



என்னை பதவியில் இருந்து மாற்றியதற்கு ப.சிதம்பரம் காரணமா என்கிறீர்கள்? அது எப்படி சொல்ல முடியும். அவர் காங்கிரஸ் தலைவர் இல்லை. அவரால் எப்படி என்னை நீக்க முடியும்?

என்னிடம் எவ்விதமான கசப்போ, மன அழுத்தமோ இல்லை. மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.

ராகுல் காந்தி என்னை தேர்தலில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். வேண்டாம் என்றால் போட்டியிட மாட்டேன்.

ராகுல்காந்தி எனக்கு சில பணிகளை கொடுத்துள்ளார். அவரது வழிகாட்டுதல்படி கட்சியின் சாதாரண 5 ரூபாய் உறுப்பினராக இருந்து செயல்படுவேன்.

அமெரிக்காவில் ரஜினியை சந்தித்ததால் கட்சி கோபப்பட்டது என்கிறீர்கள். ரஜினி எனக்கு 40 ஆண்டுகால நண்பர். அவரை சந்திக்க நான் அமெரிக்கா வரை செல்ல வேண்டியதில்லை. இது தவறான தகவல்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் எம்.பி. விசுவநாதன், காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர். #Congress #RahulGandhi #Thirunavukkarasar
Tags:    

Similar News