செய்திகள்

ரூ.1 லட்சம் அபராதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- விக்கிரமராஜா வலியுறுத்தல்

Published On 2019-02-14 05:11 GMT   |   Update On 2019-02-14 05:11 GMT
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார். #vikramaraja #plasticbanned #tngovt

சென்னை:

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிளாஸ்டிக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. மாநில அரசுக்கு பிளாஸ்டிக் தடை விதிக்க அதிகாரமில்லை என்பதே முதன்மையான வழக்கு.

இந்நிலையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ள பிளாஸ்டிக் தடை மீறல்களுக்கான தண்டனை, அபராதம் போன்றவை அதிகார அத்துமீறல் மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பும் ஆகும்.

இதுபோன்ற சிக்கலான நேரங்களில் வணிகர் அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்.

பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருள் அறிமுகப்படுத்தாத நிலையில் நிறைவேற்றப்பட உள்ள சட்ட முன்வடிவுகள் அதிகாரிகளின் அத்துமீறல்களுக்கு மட்டுமே வழி வகுக்கும். தினசரி வட்டிக்கு கடன் வாங்கி, அன்றாடம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிற லட்சக் கணக்கான சிறு, குறு வியாபாரிகளை இந்த சட்டம் வெகுவாக பாதிக்கும்.

பிளாஸ்டிக் பற்றிய அதீத விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமே தடை செய்யப்பட்ட பொருட்களை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதையும் கவனத்தில் கொண்டு, அதற்குரிய வகையில் அபராத தண்டனையை மறுபரிசீலனை செய்து தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.

இவ்வாறு விக்கிரமராஜா அதில் கூறி உள்ளார். #vikramaraja #plasticbanned #tngovt

Tags:    

Similar News