செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதை தவறாக எடுத்து கொள்ளக்கூடாது - தம்பிதுரை

Published On 2019-02-25 07:45 GMT   |   Update On 2019-02-25 07:45 GMT
மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தவறாக எடுத்துக்கொள்ள கூடாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #ThambiDurai #ADMK
மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்தில் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அரசு நிலைப்பாளையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது விவசாயிகளுக்கான திட்டம். இது குறித்து பாராளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் குரல் எழுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மோடி அரசானது விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல அடிப்படையில் தான் இது தரப்பட்டிருக்கிறது.

எந்த திட்டங்கள் ஆனாலும் குறை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல திட்டங்களை அறிவிப்பார்கள். அதே போல் இந்த மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்து இருக்கின்றது. இதை தவறாக எடுத்துக்கொள்ள கூடாது. திட்டங்களை குறை சொன்னால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்றார்.



பின்னர் அவரிடம் தமிழக அரசு சார்பில் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ள ரூ.2ஆயிரம் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்ததாவது:-

2006 ம் ஆண்டு வறுமைக்கோடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் பலரின் பெயர் விடுபட்டிருப்பது உண்மை தான். விடுபட்டவர்களை தான் மீண்டும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதிகாரிகள் ஆய்வு செய்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியானவர்களுக்கு கண்டிப்பாக ரூ.2000 கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்காகத்தான் மனுக்களை பெற்று வருகின்றோம் என்றார். #ThambiDurai #ADMK
Tags:    

Similar News