செய்திகள்

எங்கள் கூட்டணியில் தேமுதிக நிச்சயம் வரும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2019-02-25 08:58 GMT   |   Update On 2019-02-26 08:09 GMT
தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் வரும் என்று நம்புவதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #PonRadhakrishnan #DMDK
நாகர்கோவில்:

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 1-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி அன்று காலை 11 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் தொடங்குகிறது. பிரதமர் மோடி தமிழகத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தான் வருகிறார். குமரி மாவட்டத்திற்கும் அதுபோல தான் வருகிறார்.

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதிக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பாரதிய ஜனதா கூட்டணியை ‘பி’ அணி என்றும், தமிழகத்தில் நாங்கள்தான் ‘ஏ’ அணி என்றும் கமல்ஹாசன் கூறி உள்ளார். சினிமாவில் தான் ‘ஏ’, ‘யூ’ என்று சான்றிதழ் கொடுப்பார்கள். அவர் எந்த அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை. தமிழக குடும்பங்களின் கூட்டணிதான் எங்கள் கூட்டணி. எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் வரும் என்று நம்புகிறோம்.

பிரதமர் நரேந்திர மோடி ரேடியோவில் மனதின் குரல் என்ற தலைப்பில் பேசி வந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் அந்த நிகழ்ச்சி நிறைவு பெற்று உள்ளது. தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் ஆன பிறகு மீண்டும் நரேந்திர மோடி மனதின் குரல் மூலம் மக்களுடன் ரேடியோவில் பேசுவார்.



பிரதமர் ரேடியோவில் பேசும்போது மக்களின் கருத்துக்களை கேட்டு உள்ளார். மக்கள் கருத்துக்களை அவரிடம் தெரிவிக்க வசதியாக குமரி மாவட்டத்தில் பொது இடங்களில் அதற்காக பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. நாகர் கோவில் வேப்பமூடு சந்திப்பு, வடசேரி சந்திப்பு, ஆரல்வாய்மொழி, ஈத்தா மொழி, திங்கள்நகர், தக்கலை, புதுக்கடை, குழித்துறை ஆகிய இடங்களில் இந்த பெட்டி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #DMDK
Tags:    

Similar News