செய்திகள் (Tamil News)

ஜெயலலிதா அறிவித்த செல்போன் வழங்கும் திட்டம் கிடப்பில் உள்ளது - தங்க தமிழ்செல்வன்

Published On 2019-02-26 05:23 GMT   |   Update On 2019-02-26 05:23 GMT
ஜெயலலிதா அறிவித்த செல்போன் வழங்கும் திட்டம் கிடப்பில் உள்ளது என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #ThangaTamilselvan #Parliamentelection

கூத்தாநல்லூர்:

அமமுக சார்ப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில்நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார்.

இதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், தங்கதமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழகத்தில் தேர்தல் குறித்த எந்த கவலையுமின்றி, மக்கள் பணியாற்றுவதிலும், மக்களை சந்திப்பு என செயல்படுவதும் அ.ம.மு.க.மட்டும் தான். இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களிலும் எந்த கட்சியும் தனித்து நின்று வென்றதில்லை, ஆனால் ஜெயலலிதா மோடியா, லேடியா என்ற கேள்வியை எழுப்பியதால் தமிழகத்தில் அ.தி.மு.க. தனித்து வெற்றி பெற்று இந்திய அளவில் 3-வது பெரிய கட்சி என்ற சாதனையை நடத்தி காட்டினார். அவரது அந்த துணிவு இன்றைக்கு டி.டி.வி.தினகரனிடம் உள்ளது.

 


தேசிய கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்று அறிவிக்கிற துணிச்சல் நம்மிடம் இருப்பதால்தான், ஜெயலலிதா வழியில் தேர்தலை சந்திக்கிறோம். தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை பொறுக்க முடியாததால் தான் நீட் தேர்வு முறையை கொண்டு வந்தனர். 1197 மதிப்பெண்களை பெற்ற அனிதா நீட்தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். மடியில் கனம் இருந்த காரணத்தால் மத்திய அரசை இப்பிரச்சினையில் எதிர்க்கும் துணிவை இழந்தனர். ஆனால் மீத்தேன், நீட் தேர்வு என மக்களுக்கு எதிரான திட்டங்களை, எதிர்க்கிற ஒரே தலைவர், தினகரன் மட்டும் தான்.

ஜெயலலிதா அறிவித்த செல்போன் வழங்கும் திட்டம் 2 வருடமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ ஊழியர்களின் நியாயமான கோரிக்கை பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதாகும். அவர்களிடம் பிடித்த பணத்தை திரும்ப தரவேண்டும் என்றும் போராடினார்கள். ஆனால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி இல்லை என்று கூறினார். ஆனால் ஒருபுறம் பொங்கல் பரிசுக்காக ரூ 2500 கோடியை ஒதுக்கினார்.

1952-ல் இருந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் தேசிய கட்சிகளோடு, மாநில கட்சிகள் கூட்டு சேர்ந்ததால் தான், மாநில உரிமைகளை இழக்க நேருகிறது. மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரும்போது, தடுக்க முடிவதில்லை. அதனால்தான் அ.ம.மு.க. தேசிய கட்சியோடு கூட்டணி கிடையாது என்கிறது.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க வெற்றி பெற்று 'அரசியல் அதிசயம்' என்கிற சாதனையை நிகழ்த்தி காட்ட போகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார். #ThangaTamilselvan #Parliamentelection

Tags:    

Similar News