செய்திகள்

பொள்ளாச்சி அருகே கார் வாய்க்காலில் பாய்ந்து 8 பேர் பலி

Published On 2019-03-13 06:53 GMT   |   Update On 2019-03-13 07:01 GMT
பொள்ளாச்சி அருகே கார் வாய்க்காலில் பாய்ந்து 8 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

பொள்ளாச்சி:

கோவை மசக்காளிப்பாளையம் உப்பிலி பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் கேபிள் ஆபரேட்டர். இவரது மனைவி சித்ரா, மகள் பூஜா (8).

பிரகாஷ் தனது மனைவி, மகள், அக்காள் சுமதி, அண்ணன் பன்னீர் செல்வம் மனைவி லதா, அவரது மகள் தாரணி (10), கவியரசு (9), நந்தனா (3) ஆகியோருடன் காரில் பழனி கோவிலுக்கு சென்றார்.

நேற்று இரவு சாமி தரிசனம் முடித்து விட்டு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.இன்று அதிகாலை 1 மணியளவில் பழனி-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெடிமேடு என்ற பகுதியில் கார் வந்து கொண்டு இருந்தது.

அப்போது அங்கு பி.ஏ.பி. வாய்க்காலில் உள்ள குறுகிய பாலத்தை காரை ஓட்டிய பிரகாஷ் கவனிக்கவில்லை.

திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி வாய்க்காலில் தலைகுப்புற பாய்ந்தது. கார் பாய்ந்த வேகத்தில் தண்ணீரில் மூழ்கியது.

இந்த விபத்தில் பிரகாஷ், மனைவி சித்ரா, மகள் பூஜா, அக்காள் சுமதி, தாரணி, லதா ஆகியோர் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தனர்.

இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் கார் வாய்க்காலுக்குள் பாய்ந்து 8 பேர் பலியானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கோமங்கலம் போலீசுக்கும், பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தான் காரை மீட்டனர். 8 பேர் உடல்களையும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரகாஷ் தனது குடும்பத்துடன் பழனி கோவிலுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பும் முன் கோவையில் உள்ள உறவினர்களிடம் செல்போனில் பேசி உள்ளார். அவரது குடும்பத்தினரும் நள்ளிரவு 11.30 மணி வரை உறவினர்களிடம் பேசி வந்துள்ளனர். அதன் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து விசாரித்த போது தான் கார் வாய்க்காலில் பாய்ந்து 8 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இதே பாலத்தின் சுவரை உடைத்து கொண்டு கார் வாய்க்காலில் பாய்ந்து மூணாறுக்கு சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பிய கேரளாவை சேர்ந்த வங்கி ஊழியர்கள் 4 பேர் பலியான சம்பவம் நடைபெற்றது. #accident

Tags:    

Similar News