செய்திகள்
கைது

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபரிடம் ரூ.58 லட்சம் மோசடி- திருச்சி விடுதியில் பதுங்கியவர் கைது

Published On 2021-11-05 13:03 GMT   |   Update On 2021-11-05 13:03 GMT
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபரிடம் ரூ.58 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கல்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். பட்டதாரியான இவர் அரசு வேலையில் சேருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இது தொடர்பாக திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்டவேலம்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

சோமசுந்தரம் வேலை தேடுவதை அறிந்து கொண்டு, பணம் கொடுத்தால் ஆவின் நிறுவனத்தில் உதவி மேலாளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணிகளில் நிரந்தர வேலை வாங்கிவிடலாம் என்று அருண்குமார் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சோமசுந்தரம், அவர் கேட்டது போல் ரூ.58 லட்சத்து 28 ஆயிரத்து 500 பணத்தை அருண்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் நாட்கள் கடந்த நிலையில் வேலை வாங்கித் தராமல், சோமசுந்தரத்திடம் பேசுவதையும், அருண்குமார் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சோமசுந்தரம், வேலை வேண்டாம், கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று கேட்டுள்ளார்.அதற்கு அருண் குமார், பணத்தை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனை கேட்ட சோமசுந்தரம் உடனடியாக அரியலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் தலைமறைவான அருண்குமாரை தனிப்படை அமைத்து தேடி விசாரித்து வந்தனர்.

விசாரணையில், திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அருண்குமார் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அப்பகுதிக்குசென்ற தனிப்படை போலீசார், அங்கு தனியார்விடுதியில் பதுங்கியிருந்த அருண்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் அருண்குமார் பலரிடம் ஆவின்நிறுவனத் தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News