செய்திகள் (Tamil News)
நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.

கிளை வாய்க்காலுக்கு உரிய தண்ணீர் வழங்காததை கண்டித்து நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

Published On 2021-11-07 09:20 GMT   |   Update On 2021-11-07 09:20 GMT
காங்கயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பை மீறி 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை காங்கயத்தில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காங்கயம்:

வெள்ளகோவில் விவசாயிகள் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு உரிய தண்ணீர் வழங்காததால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரி களை கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அன்று இரவுமுழுவதும் பொதுப்பணித்துறை அலுவலகத்திலேயே சமையல் செய்து காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

2-வது நாளாகவும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து அத்துமீறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் 60 பேர் மீது பொதுப்பணித்துறை சார்பில் புகார் செய்யப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு சுற்று தண்ணீர் திறப்பின்போதும் காங்கேயம், வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் வருவதில்லை எனக்கூறி பல்வேறு கட்ட போராட்டத்தை விவசாயிகள் நடத்தினார்கள்.

பி.ஏ.பி. வாய்க்காலில் நடைபெறும் நீர் திருட்டை கண்டுகொள்ளாமல் விவசாயிகளை வஞ்சிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பரம்பிக்குளம் ஆழியாறுபிரதான கால்வாய் அருகில் கிணறுகள் வெட்டி தண்ணீர் திருடுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்தும் இன்று வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்புசங்கத்தின் சார்பில் காங்கேயத்தில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இதனையடுத்து காங்கயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பை மீறி 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை காங்கயத்தில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்தனர்.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்து  விவசாயிகள் வரக்கூடும் என்பதால் காங்கேயம் நகருக்குள் வரும் வெள்ளகோவில் சாலை, ஈரோடு சாலை, சென்னிமலை சாலை, தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News