உள்ளூர் செய்திகள் (District)
ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது - ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

Published On 2021-12-01 11:32 GMT   |   Update On 2021-12-01 11:32 GMT
வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் வெள்ளாத்து கோட்டை ஏரி முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துகோட்டை கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 44 ஏக்கரில் ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி 200 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.

இந்தநிலையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இந்த ஏரியில் இருந்து வெளிவரும் கால்வாயை சிலர் அடைத்து விட்டனர். இதனால் மழை பெய்யும் போது ஏரி முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் மற்றும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் வெள்ளாத்து கோட்டை ஏரி முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. மேலும் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.

தண்ணீர் வெளியேற முடியாததால் முழங்கால் அளவு தண்ணீரில் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனை கண்டித்து வெல்லத்துக்கோட்டை கிராமமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராணிராஜேந்திரன் தலைமையில் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாசில்தார் ராமன் அவர்களுடன் சமரசப்பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி ஏரியின் உபரி நீர் செல்ல வழிவகுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அருகில் உள்ள சிறிய ஏரியில் யாரும் மீன் பிடிக்கக் கூடாது என்று தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Similar News