உள்ளூர் செய்திகள் (District)
கோப்புபடம்

கொடநாடு வழக்கு-5 பேரிடம் தனிப்படை விசாரணை

Published On 2022-01-08 10:25 GMT   |   Update On 2022-01-08 10:25 GMT
கொடநாட்டில் நடந்த கொலை,கொள்ளை சம்பவம் தொடர்பாக 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கோவை:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இந்த வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொடநாடு மேலாளர் நடராஜன், சயான் மற்றும் அரசு தரப்பு சாட்சிகள் என தற்போது வரை 150-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். 

இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ள ஜிதின்ஜாய், பிஜின்குட்டி, சதீசன், சம்சீர் அலி மற்றும் திபு ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினர்.

அதன்படி நேற்று முன்தினம் கோவை காவலர் பயிற்சிபள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் திபு ஆஜாரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை சதீசன், சம்சீர் அலி, ஜிதின்ஜாய், பிஜின்குட்டி ஆகியோர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களுடன் திபுவும் ஆஜரானார்.

இவர்கள் 5 பேரிடமும் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் கொடநாடு கொலை, கொள்ளை நடந்தது எப்படி? என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கொடநாடு வழக்கில் ஒரே நாளில் குற்றவாளிகள் 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதால் வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Similar News