உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

விமான பயணிகளுக்கான கட்டுப்பாடு தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன

Published On 2022-02-14 04:12 GMT   |   Update On 2022-02-14 04:12 GMT
கொரோனா பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்பட்டதால் பயணிகள் விரைவாக விமானநிலையத்தை விட்டு வெளியே வரமுடிந்தது.
சென்னை:

சர்வதேச விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வு செய்யப்பட்டன. சர்வதேச அளவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது.

இந்தியாவிலும் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இனி 7 நாள் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடு இல்லை.

வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையும் கட்டாயம் இல்லை. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் உடல்நிலையை சுயமாக கண்காணிக்க 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஆபத்தான நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் புறப்படும் 72 மணிநேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை சான்றிதழுக்கு பதிலாக 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை தர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டன. வெளிநாட்டு பயணிகளின் வழக்கமான ஆவணங்கள், உடைமைகள் மட்டுமே சோதனை செய்யப்பட்டது.

கொரோனா பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்பட்ட தால் பயணிகள் விரைவாக விமானநிலையத்தை விட்டு வெளியே வரமுடிந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதால் வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்று அதிகாலையில் இருந்து தளர்வுகள் நடைமுறைக்கு வந்ததால் பயணிகள் விரைவாக வீடுகளுக்கு செல்ல முடிந்தது. விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

Tags:    

Similar News