உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே சேவைகள் பெறும் வசதி- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2022-04-12 10:42 GMT   |   Update On 2022-04-12 10:42 GMT
மக்களுக்கு வழங்கப்படும் சேவை எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடன், விரைவாக செயல்படுத்தப்படுவதோடு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் வரும் சிரமம் குறையும்.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2021-22-ம் ஆண்டிற்கான உள் (போக்குவரத்து) துறை மானியக் கோரிக்கையில், ஆதார் அட்டையை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தி பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே நேரடி தொடர்பு இல்லாத போக்குவரத்து சேவைகளான பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பழகுநர் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுதல், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரியை மாற்றுதல் ஆகியவற்றை பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே www.parivahan.gov.in என்ற இணையதளம் வாயிலாக சேவையை பெறும் வசதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன்மூலம், மக்களுக்கு வழங்கப்படும் சேவை எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடன், விரைவாக செயல்படுத்தப்படுவதோடு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் வரும் சிரமம் குறையும்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், தலைமைச் செயலாளர் இறையன்புமற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News