உள்ளூர் செய்திகள் (District)
கோப்புப்படம்

வேலூர் ஜெயிலில் பரோல் வழங்கினால் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட முடிவு

Published On 2022-05-08 08:32 GMT   |   Update On 2022-05-08 08:32 GMT
வேலூர் ஜெயிலில் பரோல் வழங்கினால் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக வக்கீல் தெரிவித்துள்ளார்.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். உயர் பாதுகாப்பு தொகுதியில் உள்ள முருகன், பரோல் வழங்கக் கோரி இன்று 8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

சிறையில் உள்ள முருகனை அவரது வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்துப் பேசினார்.அவர் கூறியதாவது:-

தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனுக்கு 5-ந் தேதி மாலை மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவமனையில் அவருக்கு 6 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. 

திடீரென காய்ச்சல் வந்ததால் கபசுர குடிநீர் வழங்கியுள்ளனர். பின்னர் 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றிய பிறகு முருகனுக்கு இரவு 11 மணியளவில் சுய நினைவு திரும்பியுள்ளது.

முருகனை அவரது மனைவி நளினி சந்தித்து பேசியதுடன் உண்ணாவிரதத்தை கைவிட கோரினார். ஆனால், மறுத்துவிட்டு முருகன், நளினியின் தொடர் வற்புறுத்தல் காரணமாக 2 ஆரஞ்சு துண்டுகளை சாப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து ஜெயிலர் கூறியதின் அடிப்படையில் சிறிதளவு மோர் குடித்துள்ளார். உண்ணாவிரதத்தை கைவிட நான் பேசியும் அவர் சமாதானம் அடையவில்லை.

குடும்பத்தினரை சந்திக்க 6 நாட்கள் பரோல் கோரி மனு அளித்துள்ளார். வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரது பரோல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனது வழக்கை சிறை நிர்வாகம் திட்டமிட்டே நடத்தவிடாமல் தடுப்பதாக அவர் நினைக்கிறார். 

இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரில் 3 பேருக்கு பரோல் வழங்கிய நிலையில் இலங்கையைச் சேர்ந்த தனக்கு மட்டும் பரோல் ஏன் மறுக்கப்படுகிறது என கேள்வி எழுப்புகிறார். 

31 ஆண்டுகள் சிறையில் கடந்துவிட்டது. 6 நாட்கள் பரோல் கொடுத்தால் உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன். இல்லாவிட்டால் இறந்தாலும் பரவாயில்லை என்கிறார். சிறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளும் அவரை சமாதானம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News