உள்ளூர் செய்திகள் (District)
கோப்புபடம்.

அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

Published On 2022-05-08 09:42 GMT   |   Update On 2022-05-08 09:42 GMT
கும்பகோணம் பகுதியில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வில் 1½ கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்தனர்.
கும்பகோணம்:

ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 3 பேர் வாந்தி- மயக்கத்தால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தமிழக அரசு, கோழி இறைச்சியை பயன்படுத்தி ஷவர்மா உள்ளிட்ட உணவுகள் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் அனைத்து உணவகங்களிலும் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டது.

கும்பகோணம் பகுதியில் உள்ள அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சசிக்குமார், முத்தைய்யன், பாலகுரு ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது உணவகங்களில் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் கோழி இறைச்சி தரமானதாக உள்ளதா? உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் உள்ளிட்ட பிற உணவு பொருட்கள் தரமானதாக உள்ளதா? உணவு பொருட்களில் ரசாயனங்கள் கலந்துள்ளதா? காலகெடு முடிந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பன உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கும்பகோணம் பகுதியில் உள்ள 12 உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது ஷவர்மா தயாரிக்க வைத்திருந்த 1½ கிலோ கெட்டுபோன கோழி இறைச்சியை அதிகாரிகள் கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தனர்.
 
மேலும் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்திய உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். உணவகங்களில் தரமற்ற உணவுகளை தயாரித்து வழங்கினால் உரிமம் ரத்து செய்வதோடு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Similar News