உள்ளூர் செய்திகள் (District)
தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி.

கோவை, நீலகிரியில் 5,586 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-05-08 10:10 GMT   |   Update On 2022-05-08 10:10 GMT
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.
கோவை:

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 
 
இதில் பெரும்பாலானவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதற்கிடையே மீண்டும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொற்று பரவல் அதிகமாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
 
இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் 3,679 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கிராம புறங்களில் 2505 முகாம்களிலும், மாநகராட்சியில் 950 முகாம்களிலும் இன்று தடுப்பூசி முகாம் நடந்தது.

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முகாமில் இதுவரை முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாதவர்கள் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
 
நீலகிரி மாவட்டத்தில் இன்று  1,907 முகாம்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக் கூடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடக்கிறது.

காலை முதலே இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள், முதல் தவணை செலுத்தி, இரண்டாவது தவணை செலுத்தாதவர்கள் என பலரும் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். இதேபோன்று 12 வயதுக்கு மேற்பவட்டவர்களும் முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 
 
ஒவ்வொரு முகாமிலும் ஒரு தடுப்பூசி செலுத்துபவா், ஒரு தரவு பதிவாளா், 2 அங்கன்வாடிப் பணியாளா்கள் என மொத்தம் 4 பணியாளா்கள் என மாவட்டம் முழுவதும் 7,628 பணியாளா்கள் பணியில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 5 லட்சத்து 64,754 போ், 2-ம் தவணை தடுப்பூசியாக 5 லட்சத்து 52,095 போ் என மொத்தம் மாவட்டத்தில் 11 லட்சத்து 16,849 போ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

Similar News