சோழவரம் அருகே ஊராட்சி துணைத்தலைவரின் அண்ணன் கொலையில் 3 பேர் சிக்கினர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- கொலைக்கான காரணம் என்ன? கூட்டாளிகள் யார்? யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.
பொன்னேரி:
சோழவரம் அருகே உள்ள நெடுவரம்பாக்கம் பெரிய காலணியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 32). இவரது தம்பி இளங்கோவன். தி.மு.க.வை சேர்ந்த இவர் ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார்.
நேற்று முன்தினம் அப்பகுதியில் தேவாலயத்தில் நடந்த விழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக சகோதரர்கள் லட்சுமணன், இளங்கோவன் ஆகியோர் சோழவரம் போலீசில் புகார் அளித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர்.
நெடுவரம்பாக்கம் காலனி அருகே வந்தபோது மர்மகும்பல் அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமணன் இறந்தார். அவரது தம்பி இளங்கோவனுக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவருக்கு சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் என்ன? கூட்டாளிகள் யார்? யார்? என்று விசாரணை நடந்து வருகிறது. கொலை தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.