உள்ளூர் செய்திகள்

கோவையில் ஒரே நாளில் 85 விளம்பர பலகைகள் அகற்றம்

Published On 2023-06-04 08:58 GMT   |   Update On 2023-06-04 08:58 GMT
  • மொத்தம் 85 விளம்பர பலகைகள் நேற்று அகற்றப்பட்டுள்ளன.
  • விளம்பரப் பலகைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

கோவை,

கோவை மாநகரப் பகுதிகளில் ஒரே நாளில் 85 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே விளம்பர பலகைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் விளம்பர பலகை சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் அடங்கிய குழு அமைத்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநகராட்சிப் பகுதிகளில் 100 வார்டுகளிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது:-

கோவை மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 80 சதவீத விளம்பரப் பலகைகள் ஏற்கெனவே அகற்றப்பட்டுவிட்டன.

வடக்கு மண்டலத்தில் 26, கிழக்கு மண்டலத்தில் 8, மேற்கு மண்டலத்தில்16, தெற்கு மண்டலத்தில் 24, மத்திய மண்டலத்தில் 11 என மொத்தம் 85 விளம்பர பலகைகள் நேற்று அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பாலக்காடு சாலை, ஈச்சனாரி சாலை, பேரூர், ராமநாதபுரம், சிங்கா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

மேலும், சில இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களில் அகற்றப்படாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறி னார்.

Tags:    

Similar News