உள்ளூர் செய்திகள்

கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2023-03-07 09:25 GMT   |   Update On 2023-03-07 09:25 GMT
  • 2 நாட்களில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு.

திருவாரூர்:

திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் அக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் கவியரசன்.

இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஆவார்.

இவர் முன் பகை காரணமாக ஒரு மாதத்திற்கு முன்பு திருக்கண்ணமங்கை அருகே வயல்வெளியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூர் என்கிற இடத்தில் காவல்துறையினர் இந்த கொலையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் காளிதாஸ் உள்ளிட்ட ஐந்து நபர்களை கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் அப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து அதனை எதிர்த்து அதே இடத்தில் பாஜக மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சபரிநாதன் சின்ன காளி என்கிற காளிதாஸ், பெரிய தம்பி என்கிற ராஜசேகர், சந்தோஷ்குமார், வசந்தகுமார், சிவகாளிதாஸ், கணேசன், சந்தோஷ், சுர்ஜித் ஆகிய 9 நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் பெயரில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதில் சின்ன காளி என்கிற காளிதாஸ் கொரடாச்சேரி ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News