உள்ளூர் செய்திகள் (District)

பொள்ளாச்சியில் குடிபோதையால் மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த விவசாயி

Published On 2023-04-28 09:56 GMT   |   Update On 2023-04-28 09:56 GMT
  • உதவுவது போல் நடித்து வாலிபர் கடத்திச் சென்றார்
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவை

கோவை அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 52 வயது விவசாயி. குடிப்பழக்கம் உடையவர்.

சம்பவத்தன்று அவர் மோட்டார்சைக்கிளில் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்கச் சென்றார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதை தலைக்கேறியது. கடையில் இருந்து வெளியே வந்த அவர் மோட்டார்சைக்கிளை எடுக்க முயற்சி செய்தார். நடக்க கூட முடியாமல் போதையில் இருந்த அவரால் மோட்டார்சைக்கிளை எடுக்க முடியவில்லை. அடுத்தடுத்து அவர் கீழே விழுந்தார்.

அந்த சமயம் அங்கு வந்த வாலிபர், போதை நபருக்கு உதவுவதாக கூறினார். உங்கள் வீடு எங்கே இருக்கிறது சொல்லுங்கள் என்றார். உடனே தனக்கு சொந்தமான தோட்டத்தில் கொண்டு போய் தன்னை விடுமாறு போதை நபர் கூறினார். மோட்டார்சைக்கிளின் பின்னால் அவர் ஏறிக்கொள்ள வாலிபர் தோட்டத்துக்கு வண்டியை விட்டார். தோட்டத்தில் போட்டிருந்த கட்டிலில் போதை நபரை படுக்க வைத்து வாலிபர் சென்று விட்டார். காலையில் போதை தெளிந்து எழுந்த விவசாயிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. தனக்கு உதவுவதாக கூறி அழைத்து வந்த வாலிபர், செல்லும் போது விவசாயியின் மோட்டார்சைக்கிளையும் திருடிச் சென்று இருந்தார்.

போதையை பயன்படுத்தி வாலிபர் தன்னை ஏமாற்றி மோட்டார்சைக்கிளை திருடிச் சென்றதை உணர்ந்த விவசாயி, கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் எதாவது காட்சிகள் பதிவாகி உள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News