- தவிட்டு மற்றும் உமி ஆகியவைகள் குடோனில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது.
- குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து இயங்கி வரும் இந்த அரிசி ஆலையின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் இங்கு எடுத்து வரப்பட்டு ஊறல் போடப்பட்டு உலர வைக்கப்பட்டு பின்னர் அரைக்கப்பட்டு ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் நெல் அரவை செய்யும்போது, அரவை இயந்திரத்தின் மூலம் வெளியேறும் தவிடு மற்றும் உமி ஆகியவைகள் அங்குள்ள குடோனில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியை சேமித்து வைக்கப்பட்டுள்ள குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனை அறிந்த இரவு நேர அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று திடீரென ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உரிய நேரத்தில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பேராபத்தும் பெரும் நஷ்டமும் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.