தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி கல்லூரி மாணவிகள் 2 பேர் படுகாயம்
- ஒரு சொகுசு கார் அதிவேகமாக ஏ.வி.ஆர் ரவுண்டானா நோக்கி வந்து கொண்டிருந்தது.
- 2 கல்லூரி மாணவிகள் மற்றும் ஒரு முதியவர் மீது மோதியது.
சேலம்:
சேலம் சூரமங்கலம், ஜங்ஷன் பகுதியில் இருந்து இன்று காலை 9.30 மணி அளவில் ஒரு சொகுசு கார் அதிவேகமாக ஏ.வி.ஆர் ரவுண்டானா நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த சொகுசு கார், 2 கல்லூரி மாணவிகள் மற்றும் ஒரு முதியவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவிகளை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் லேசான காயத்துடன் தப்பினார்.
இதைக் கண்ட அந்த பகுதி மக்கள் அந்த சொகுசு காரை ஓட்டி வந்த இளைஞர் உட்பட 2 பேரை சாரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த இளைஞர்கள் குடி போதையில் இருப்பது தெரியவந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள், சேலம் அழகாபுரம் சின்னபுதூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகள் கிருத்திகா (வயது 19), பெருமாள் மகள் சிவரஞ்சனி (19) என்பதும், இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்தது. இதில் ஒரு மாணவிக்கு கால் முறிவும், மற்றொரு மாணவிக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டு உள்ளது.மேலும் சொகுசு காரை ஓட்டி வந்தவர்கள், சேலம் சித்தனுர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் விஜய் (26), சேலம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் அருள் (35) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாறுமாறாக வந்த கார் மோதி கல்லூரி மாணவிகள் படுகாயம் அடைந்ததும், அந்த வழியே சென்றவர்கள் சிதறி ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.