ஊடுபயிர் மூலம் தீவனப் பயிர் உற்பத்தியைப் பெருக்கும் திட்டம் -தென்காசி கலெக்டர் தகவல்
- தேர்வு செய்யப்படும் பயனாளிகள் 3ஆண்டுகள் வரை பராமரிக்க விருப்பம் உடையவராக இருக்க வேண்டும்.
- சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தென்காசி:
தமிழ்நாடு அரசு கால்நடைகளுக்கான பசுந்தீவன பற்றாக்குறையை மேம்படுத்தும் நோக்குடன் தீவன மேம்பாட்டு நிறுவனம் 2022 -23 கீழ் ஊடுபயிர் மூலம் தீவனப் பயிர் உற்பத்தியைப் பெருக்கும் திட்டம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவில் 2022-23-ம் ஆண்டிற்கு 40 ஏக்கரில் செயல்படுத்த ஆணை வழங்கியுள்ளது.
பயனாளிகள் கால்நடை வளர்ப்பவர்களும் நீர்ப்பாசன வசதியுடன் கூடிய 12 ஏக்கர் முதல் ஒரு ஹெக்டேர் வரை தோப்பு, பழத்தோட்டம் வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.தேர்வு செய்யப்படும் பயனாளிகள் 3ஆண்டுகள் வரை பராமரிக்க விருப்பம் உடையவராக இருக்க வேண்டும். கால்நடை வைத்திருக்கும் பயனாளிகள் நீர் மேலாண்மை முறைகளை பயன்படுத்துபவராக இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகள் அதிக கால தீவன பயிர் வளர்ப்பவர் ஆக இருக்க வேண்டும்.
சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தீவன விதை விதைப்பு சான்று கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று வழங்க வேண்டும். எனவே மேற்படி திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி விவரங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.