காரைக்காலில் எலி மருந்து கேக் சாப்பிட்ட பள்ளி மாணவி பலி
- கடந்த சில மாதமாக தசை சுருக்க நோய் ஏற்பட்டதால், சிறுமியால் நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் பக்கவாட்டு சுவற்றை பிடித்து மெதுவாக நடந்து வந்தார்.
- ஜன்னல் பக்கம் இருந்த கேக் ஒன்றை எடுத்து சாப்பிட்டதாக சிறுமி சலேத் நிதிக்சனா கூறி மயங்கி விழுந்துள்ளார்.
புதுச்சேரி :
காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி பகுதியில் வசிப்பவர்கள் ராஜா-ஸ்டெல்லா மேரி தம்பதிகள். ஸ்டெல்லா மேரி வரிச்சிக்குடியில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் சலேத் நிதிக்சனா (வயது 14) அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில், 7-ம் வகுப்பு படித்து வந்தார். சலேத் நிதிக்சாவிற்கு கடந்த சில மாதமாக தசை சுருக்க நோய் ஏற்பட்டதால், சிறுமியால் நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் பக்கவாட்டு சுவற்றை பிடித்து மெதுவாக நடந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமி சலேத் நிதிக்சனா வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஏன் வாந்தி எடுத்தாய் என, சிறுமியிடம் தாய் கேட்டபோது, ஜன்னல் பக்கம் இருந்த கேக் ஒன்றை எடுத்து சாப்பிட்டதாக சிறுமி சலேத் நிதிக்சனா கூறி மயங்கி விழுந்துள்ளார். உடனே தாய் ஸ்டெல்லா மேரி சிறுமி சலேத் நிதிக்சனாவை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த சிறுமி சலேத் நிதிக்சனா சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இது குறித்து, கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்