உள்ளூர் செய்திகள் (District)

கூடலூர் அருகே அரிசி மூட்டையை மட்டும் தூக்கி சென்று ருசிக்கும் ஒற்றை காட்டு யானை

Published On 2023-10-31 08:29 GMT   |   Update On 2023-10-31 08:29 GMT
  • ஜன்னலை உடைத்து துதிக்கையை நுழைத்து அரிசி மூடைகளை தேடுகிறது
  • ரேஷன் கடையை உடைத்து பொருட்களை சூறையாடி அட்டகாசம்

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் பந்தலூர், சேரம்பாடி ஆகிய பகுதிகளில் கட்டைக்கொம்பன் என்ற ஒற்றை காட்டுயானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இதனை தடுத்து நிறுத்தும் வகையில் வனத்துறை ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்தபோதிலும் அது வனஊழியர்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு நைசாக ஊருக்குள் புகுந்து விடுகிறது.

இந்த நிலையில் அந்த காட்டு யானை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பந்தலூர் அடுத்த ஏலமன்னா பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைத்து அங்கு இருந்த பொருட்களை சூறையாடியது.

இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள் சம்பவ பகுதிக்கு திரண்டு வந்தனர். அப்போது ஒரு காட்டு யானை அரிசி மூட்டையுடன் காட்டுக்குள் செல்வது தெரிய வந்தது.

தொடர்ந்து ஏலமன்னா பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதே காட்டு யானை சேரங்காடு குடியிருப்பு பகுதிக்கு வந்தது. தொடர்ந்து அங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் சத்துணவு கூடத்தை சூறையாடியது.

பின்னர் அங்கிருந்த ஒரு அரிசி மூட்டையை மட்டும் தூக்கி கொண்டு காட்டுக்குள் சென்று விட்டது. எனவே பள்ளி நிர்வாகம் மற்றும் சத்துணவு ஊழியர்கள் அங்கு இருந்த அரிசி மூட்டைகளை பத்திரமாக வேறு இடத்துக்கு மாற்றி விட்டனர்.

இந்த நிலையில் அதே காட்டு யானை மீண்டும் சேரங்காடு சத்துணவு கூடத்துக்கு வந்தது. பின்னர் அந்த அறையின் ஜன்னலை உடைத்து துதிக்கையை விட்டு அரிசி இருக்கிறதா என தேடி பார்த்தது.

அங்கு எதுவும் கிடைக்காததால் கட்டிடத்தின் அருகிலேயே வெகுநேரமாக காத்திருந்தது. இதுபற்றி வனத்துறையினருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர். யானை காட்டுக்குள் சென்ற பிறகே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

தொடர்ந்து இந்த யானை ஊருக்குள் வந்து அட்டாகசத்தில் ஈடுபட்டு வருவதால் இதனை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News