உள்ளூர் செய்திகள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவிலில் திரண்ட பக்தர்கள்.

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலம்

Published On 2023-08-16 09:35 GMT   |   Update On 2023-08-16 09:35 GMT
  • விழா நாட்களில் தினமும் காலை சுவாமி வீதியுலா, இரவு பல்வேறு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வருதல் நடைபெற்றது.
  • விழாவையொட்டி இன்று மதியம் சுவாமி உருகுப்பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

ஏரல்:

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசல சுவாமி கோவில் நூற்றாண்டு பழமைமிக்கது. இக்கோவிலில் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பெறுவார்கள்.

இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை சுவாமி வீதியுலா, இரவு பல்வேறு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வருதல் நடைபெற்றது. கருத்தப்பாண்டியன் கலையரங்கத்தில் பொம்மலாட்டம், நாதஸ்வரம், தவில் வாசிப்பு நிகழ்ச்சி, சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அமாவாசை திருவிழா நாளை வரை நடைபெறும். சிகர நிகழ்ச்சியான அமாவாசை ஆடி அமாவாசை இன்று சிறப்பாக நடைபெறுகிறது.

இதனையொட்டி காலையில் தாமிரபரணியி நதியில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து சுவாமியை வழிபட்டனர். மேலும் பெண்கள், பக்தர்கள் பால்குடம் சுமந்து சுவாமியை வழிபட்டனர்.

விழாவையொட்டி நூற்றுக்கணக்கான சிறிய கடைகள் அமைக்கப்பட்டு கிராம திருவிழாவை நினைவூட்டியது. விழாவையொட்டி இன்று மதியம் சுவாமி உருகுப்பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

மாலை இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத்திருக்கோலம், இரவு 11 மணிக்கு முதற்கால கற்பகபொன் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். ஆடி அமாவாசை திருவிழா இன்று நடைபெறுவதை யொட்டி ஏராளமான கார், வேன் மற்றும் அரசு சிறப்பு பஸ்கள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஸ்ரீசேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தபாண்டியன் நாடார் செய்திருந்தார்.

Tags:    

Similar News