பள்ளி, கல்லூரி மாணவர்கள் லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை
- லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராத தொகை வசூலிப்பது மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
- ரூ. 6 லட்சத்து 44 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனர் மாடசாமி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விபத்தில்லா மாநகரமாக சேலத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். குறிப் பாக கடந்த 5 ஆண்டுகளில் சேலம் மாநகரத்தில், அதிகளவில் விபத்துக்கள் நடந்த 75 இடங்களை தேர்ந்தெடுத்து உள்ளோம். அந்த இடங்களில் இன்னும் 2 நாட்களில் கூடுதல் போலீ சார் நியமிக்கப்பட்டு, வாகன தணிக்கை செய்யப்பட உள்ளது. லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராத தொகை வசூலிப்பது மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டு சேலம் மாநகரத்தில் நடந்த விபத்துகளில் 123 பேர் மரணம் அடைந்தனர். நடப்பு ஆண்டில், நவம்பர் வரை 183 பேர் விபத்தில் இறந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு இதுவரை போக்குவரத்து போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ. 6 லட்சத்து 44 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்களை தடுக்க போலீசாரின் அறிவுரைகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியின்போது தெரிவித்தார்.