உள்ளூர் செய்திகள்

தீவிர அரசியலில் ஈடுபடுவதால் தி.மு.க.வுக்கு பயம் வந்துள்ளது நடிகை குஷ்பு பேட்டி

Published On 2024-08-15 08:13 GMT   |   Update On 2024-08-15 08:13 GMT
  • தி.மு.க.வுக்கு பயம் வந்துள்ளது. அந்த பயம் இருக்கணும்.
  • கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிகிறார்கள். அது விரைவில் உடைந்து விடும்.

சென்னை:

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து நடிகையும், பா.ஜ.க. மூத்த தலைவருமான குஷ்பு சுந்தர் விலகினார். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு இந்தப் பதவி தடங்கலாக இருப்பதால் பதவி விலகியதாக குஷ்பு சுந்தர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாகவே நாட்டில் நடக்கும் சில விஷயங்கள் மீது கருத்துகளை வெளிப்படுத்தவும் எதிர்வினையாற்றவும் முடியாத நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். அதற்கு நான் வகிக்கும் மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி தடங்கலாக இருப்பதாக பல தருணங்களில் உணர்ந்தேன்.

இதனால், மிகவும் தீவிரமாக யோசித்து ஆணையத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன். அதை முறைப்படி ஆணையத்தின் தலைவர் மற்றும் நான் சார்ந்த கட்சி மேலிடத்திடமும் வெளிப்படுத்திய பிறகே பதவி விலகல் கடிதத்தை கொடுத்தேன்.

தீவிர அரசியலில் என்னால் ஈடுபட முடியாமல் போவதற்கு மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி முக்கியக் காரணமாகும். இனி ஒரு அரசியல்வாதியாக என்னால் எனது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த இயலும். எனது முடிவுக்கு கட்சி ரீதியாகவோ வெளியில் இருந்தோ எந்தவொரு அழுத்தமோ கொடுக்கப்படவில்லை.

நான் தீவிர அரசியலில் ஈடுபட போவதால் தி.மு.க.வுக்கு பயம் வந்துள்ளது. அந்த பயம் இருக்கணும். அவர்கள் கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிகிறார்கள். அது விரைவில் உடைந்து விடும்.

இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

Tags:    

Similar News