உள்ளூர் செய்திகள் (District)

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மோப்பநாய் 'பைரவா' சேர்ப்பு

Published On 2023-08-05 09:46 GMT   |   Update On 2023-08-05 09:46 GMT
  • நிலத்தின் அடியில் புதைக்கப்படும் பொருட்களை கண்டுபிடிக்கும் திறமை கொண்ட மோப்பநாய் ‘பைரவா ஆகும்.
  • மதுரை மாவட்டம் வைகை அணை பகுதியில் கடந்த 6 மாதங்களாக பைரவாக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ெபாள்ளாச்சி,

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, அமராவதி, உடுமலை ஆகிய 6 வனச்சரகங்களை கொண்டது. இங்கு புலி, மலபார் அணில், சிங்கவால் குரங்கு, வரையாடு உட்பட பல அரிய வகை விலங்குகளும், தாவரங்களும் உள்ளன. வனக்கொள்ளை, வன விலங்குகள் வேட்டை ஆகியவற்றை தடுக்கும் பணியிலும், கண்காணிக்கும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் வகையிலும், வனக்குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டறிவதற்காகவும், தற்போது டாபர்மேன் ரகத்தைச் சேர்ந்த ஒரு வயதுடைய பைரவா என பெயர் சூட்டப்பட்டுள்ள மோப்பநாய், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனை பராமரிக்கவும், வனங்குற்றங்கள் ஏற்படும் இடங்களுக்கு அழைத்துச் சென்று குற்றவாளிகளைப் பிடிக்கவும் வேட்டைத்தடுப்பு காவலர் கணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் கஞ்சா பயிரிடுவது, வன விலங்கு வேட்டை உள்ளிட்ட சட்ட விரோத வனக்குற்றங்களை கண்டறியும் வகையில், வாகனங்களில் சோதனையிடுதல், சந்தனம், ஈட்டி மரங்களின் வாசனைகளை வைத்து கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது," வனப்பகுதியில் நடைபெறும் காட்டுயிர் வேட்டை, திருட்டு, மரம்வெட்டுதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை உடனுக்குடன் கண்டறியவும், குற்றப் புலனாய்வுக்கு உதவியாகவும் வனத்துறையின் ஒவ்வொரு மண்டலத்திலும் சிறப்பு மோப்பநாய் பிரிவு ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, தற்போது ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பைரவா எனும் பெயர் சூட்ட ப்பட்டுள்ள மோப்பநாய் பணியமர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, மதுரை மாவட்டம் வைகை அணை பகுதியில் கடந்த 6 மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வனப்பொருட்கள் கடத்தல், வன விலங்குகள் வேட்டை ஆகியவற்றை துப்பறிவதுடன், நிலத்தின் அடியில் புதைத்து வைக்கப்படும் எந்த பொருளையும் எளிதில் கண்டறிந்துவிடும் அளவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. காடுகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் பணியில், மோப்ப நாய்கள் பங்களிப்பும் இருக்கும்" என்றனர்.

Tags:    

Similar News