அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வருகிற 20-ந்தேதி வரை செல்ல தடை- சாலை சீரமைப்பு பணிகள் நடக்கிறது
- நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும்.
- சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் ஏராளமானோர் சுவாமி தரிசனத்திற்கு சென்று வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும்.
இதில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று குளித்து மகிழ்வார்கள். தற்போது தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அங்கு அதிகரித்து காணப்படுகிறது. மேலும் காரையாறு பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் ஏராளமானோர் சுவாமி தரிசனத்திற்கு சென்று வருகின்றனர்.
ஆனால் இந்த 2 இடங்களுக்கும் செல்லும் சாலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அடிக்கடி மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் அவர்கள் சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறை சோதனை சாவடியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காரையாறு வரை சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவிக்கு செல்ல வருகிற 20-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.