கும்மிடிப்பூண்டி ரெயில்வே இடத்தில் வசிப்போருக்கு மாற்று இடம்- குடும்பத்துடன் சென்று துணை ஆட்சியரிடம் மனு
- 15 நாளில் வீடுகளை அனைவரும் காலி செய்ய வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
- வீடுகளை உடனே காலி செய்தால், 120 குடும்பங்களை சேர்ந்த 609 பேர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் நகர், வள்ளியம்மன் நகர், கரிமேடு உள்ளிட்ட ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் 30 ஆண்டுகளாக 120 குடும்பங்கள் வீடு கட்டி வாழ்ந்து வந்தனர். கடந்த மாதம் 27 ஆம் தேதி வீடுகளை காலி செய்யும்படி சென்னை தென்னக ரெயில்வே தலைமை அலுவலகத்தில் இருந்து பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அவர்களை மார்ச் 23ஆம் தேதி சென்னை ரெயில்வே தலைமை அலுவலகத்திற்கு அழைத்தனர். அங்கு சென்ற பொதுமக்களிடம், அடுத்த நோட்டீஸ் வழங்கியதும் 15 நாளில் வீடுகளை அனைவரும் காலி செய்ய வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் பாமக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் விஎம் பிரகாஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு வழங்கினர்.
வீடுகளை உடனே காலி செய்தால், 120 குடும்பங்களை சேர்ந்த 609 பேர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, மேற்கண்ட 120 குடும்பத்தாருக்கும் மாற்று இடம் ஒதுக்கி தரும் வரை வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாமக மாவட்ட செயலாளர் விஎம் பிரகாஷ், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசும். அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.