உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்- இன்று வேலூர் தொகுதியில் அமித்ஷா பேசுகிறார்

Published On 2023-06-11 09:35 GMT   |   Update On 2023-06-12 09:42 GMT
  • அமித்ஷா வருகை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  • பொதுக்கூட்டம் நடைபெறும் கந்தனேரி சுற்று பகுதி முழுவதும் ராட்சத பலூன்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர்:

வேலூர் அருகே உள்ள கந்தனேரியில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதற்காக சென்னை பெங்களூரு 6 வழிச்சாலை அருகே உள்ள கந்தனேரியில் பிரம்மாண்ட மேடை அமைத்துள்ளனர்.

இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசுகிறார். பொதுக்கூட்டத்தில் மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே சிங், மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று மதியம் ஹெலிகாப்டர் மூலமாக சென்னையிலிருந்து வேலூர் விமான நிலையத்திற்கு வருகிறார்.

அங்கிருந்து 6 வழிச்சாலை வழியாக பொதுக்கூட்ட மைதானத்திற்கு செல்கிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் 6 வழிச்சாலை வழியாகவே வேலூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

அமித்ஷா பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுவதையொட்டி வேலூரில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கார் வேன்களில் கந்தனேரி மைதானம் அருகே தொண்டர்கள் வந்து இறங்கினர். மேலும் தொண்டர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பினர்.

விரிவாக்க பணிகளுக்குப்பிறகு அமித்ஷா வருகை தரும் ஹெலிகாப்டர் தான் முதன் முதலாக வேலூர் விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது. இதனால் சென்னை-வேலூர் விமான நிலையம் வரை ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் நேற்று மாலை நடந்தது.

சென்னையிலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் 45 நிமிடங்களில் வேலூர் வந்தடைந்தது. அப்போது வேலூர் விமான நிலையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஹெலிகாப்டர் தரை இறங்கியது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மீண்டும் சென்னைக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.

அமித்ஷா செல்லும் பாதைகளில் 6 வழிச்சாலையில் வல்லண்டராமம் கிங்கினி அம்மன் கோவில் கந்தனேரி சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன.

மேலும் பொதுக்கூட்டம் முடிந்ததும் அமித்ஷா கார் செல்ல வசதியாக 6 வழிச்சாலையில் இருந்த தடுப்பு சுவர் அகற்றப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அமித்ஷா வருகை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கந்தனேரி பொதுக்கூட்ட மைதானத்தில் மேடையை சுற்றிலும் மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள மலை பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 4 போலீஸ் சூப்பிரண்டுகள் முகாமிட்டுள்ள நிலையில் கூடுதலாக 2 போலீஸ் சூப்பிரண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுக்கூட்டம் நடைபெறும் கந்தனேரி சுற்று பகுதி முழுவதும் ராட்சத பலூன்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை அமித்ஷா பயணம் செய்யும் சாலையை ஒட்டி உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் குறித்த தகவல்களை உடனடியாக போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டுமென அந்த பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது தொடர்பாக போலீசாருக்கு பல்வேறுகளை வழங்கினார்.

அமித்ஷா வருகையால் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News