உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தேர் திருவிழா

Published On 2024-07-11 07:12 GMT   |   Update On 2024-07-11 07:12 GMT
  • மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சிவ கோஷங்களை எழுப்பினர்.
  • முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.

சிதம்பரம்:

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனி திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

முன்னதாக இன்று அதிகாலை சித்சபையில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், தேர் நிலையான கீழரத வீதியில் தனித்தனியே அமைக்கப்பட்ட தேர்களில் வைக்கப்பட்டனர்.

சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சிவ கோஷங்களை எழுப்பினர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பதிகங்களை பாடி ஆனந்த நடனமாடி சிவபக்தர்கள் முன்னே சென்றனர். அங்கு திரண்ட திரளான பக்தர்கள் இன்று காலை 6.45 மணிக்கு தேரை இழுத்தனர்.

தேரானது கீழரதவீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் தேர்நிலையான கீழரத வீதிக்கு இரவு இரவு 7 மணிக்கு வந்தடையும். பின்னர் இரவு 8 மணிக்கு ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.

நாளை ஜூலை 12-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. 

Tags:    

Similar News