உள்ளூர் செய்திகள்

கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2022-08-29 09:26 GMT   |   Update On 2022-08-29 09:26 GMT
  • கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது
  • கலெக்டர் ரமணசரஸ்வதி வேண்டுகோள்

அரியலூர்:

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை ஏற்கனவே எட்டியுள்ளது. இதை தொடர்ந்து, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் சுமார் 1,20,000 கன அடி அளவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகளை துவைக்கவோ, மீன் பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பற்ற கரையோர பகுதிகளில் நின்று கொண்டு பொதுமக்கள் செல்போனில் 'செல்பி" எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் கால்வாய்களில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அந்த பகுதிகளுக்கு தங்களது குழந்தைகளை விளையாட செல்ல விடாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்கவும் வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News